தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்கள் என தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் இன்று மாவீரச் செல்வங்கள் உணர்வெழுச்சியுடன் வணங்கி நினைவுகூரப்பட்டுள்ளனர்

479

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதையடுத்து, 6.07 மணியளவில், மாவீரர்களுக்காக துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், வீடுகளிலும் பொதுச்சுடர் மற்றும் ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர், உறவினர், மற்றும் பொதுமக்கள் கனகபுரம் துயிலுமில்லத்தில் குவிந்து, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களிலும் இம்முறை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகவும் பெருமளவு மக்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும் இன்று காலையில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்ட அதேவேளை, மாலையிலும், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இன்று யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு அமைதி வணக்கம் செலத்தப்பட்டு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேநேரம் மாவீரர்களின் நினைவாக குருதிக்கொடை நிகழ்வும் கிழக்குப் பல்கலைக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய்த் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும்- இன்று மாலை மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நடந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர்.

அதேபோல மல்லாவி வன்னிவேளாங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும், முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்திலும், முழங்காவில் மாவீரர்துயிலுமிலத்திலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு எங்கள் காவல் தெய்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.

விசுவமடு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்ட நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.

ஊர்காவற்துறை சாட்டி மாவீரர் துயிலுமில்லம், வல்வெட்டித்துறை தீருவில் வெளி உள்ளிட்ட இடங்களிலும் மாவீரர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

வடமராட்சியின் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் தின ஏற்பாடுகளை காவல்துறை தடுத்து நிறுத்திய போதும் அதனை தாண்டி மக்கள் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவேந்தலை நடத்தியுள்ளனர்.

இன்று மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் மாவீரர் நாளைக் கடைப்பிடிக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அங்கு சென்ற காவல்துறையினர் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி கலைத்தனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த மாவீரர்களது சிவில் உடையிலான புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களை அச்சுறுத்திய காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றியுமுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவிய போதிலும், மக்கள் திரண்டு உடனடியாக அருகிலுள்ள மண்டபமொன்றிற்கு நிகழ்வை மாற்றியதுடன் திட்டமிட்டது போன்று மாவீரர் நினைவேந்தலை நடத்தியும் முடித்துள்ளனர்

முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.

தென்மராட்சியின் சாகச்சேரி நாவற்குழி கடல்நீரேரியில் கடற்புலிகளிற்கான நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வள்ளமொன்றில் வடிவமைக்கப்பட்ட நினைவுதூபியில் வீரச்சாவடைந்த கடற்புலிகளிற்கு இன்று வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இறுதிப் பெரும் சமர் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப் பகுதியிலுள்ள பச்சைப் புல்மோட்டையிலும் வீரவணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் ஆட்காட்டிவெளி, துனுக்காய் ஆலங்குளம், முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை முன்னெடுக்கப்படட நிலையில், இந்த மாவீரர் தின நினைவு கூரலின் போது, வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

திருகோணமலை சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அலையெனத் திரண்ட மக்கள் வெள்ளத்தின் நடுவே பொதுச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

துயிலுமில்லத்தின் நடுவே பிரதான பொதுச்சுடரை ஏற்றுவதற்காக தலா மூன்று மாவீரர்களை பெற்றெடுத்த இரண்டு தாய்மார் அழைக்கப்பட்டனர்.

மேன்காமத்தைச் சேர்ந்த ஜெயக்காந்தமலர் பொதுச்சுடரினை வழங்க ராஜேஸ்வரி அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிய நிலையில், இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் மண்முனை தென் மேற்கு பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 6.05 மணியளவில் மாவீரர் நினைவு மணி ஒலிக்கபட்டு பிரதான தீபச்சுடரை மேஜர் பயில்வானின் தாயார் ஏற்றிவைக்க மாவீரர்களை நினைவுகூரும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டது.

அதேபோல மாவீரர் நாள் நிகழ்வுகள் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகேயும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், இதன்போது மாவீரரின் தாய் ஒருவர் சுடரினை ஏற்றிவைத்ததுடன் ஏனைய சுடர்களை அங்கு வருகைதந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம், மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் ஆகியவை உட்பட தாயகத்தில் உள்ள பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்களிலும், சிறிலங்கா இராணுவத்தால் இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலுமில்லங்களுக்கு அருகாமையிலும் மற்றும் மேலும் பல பிரத்தியோக இடங்களிலும் இன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தமிழகத்திலும், தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், ஓசூர், சென்னை, உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற நிலையில், மாவீரர்களின் ஈகங்களை போற்றியும் தமிழீழம் அடுத்த கட்ட செயல்வடிவ போராட்ட முன்னெடுப்புகளையும் வெங்கட்ராமன் எழுச்சியுரையாற்றினார்.

அதேபோல் திருச்சி, குடந்தை உள்ளிட்ட இடங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.

புதுச்சேரியில் மில்லர் அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலு்தியுள்ளனர்.

ஓவியர் புகழ்ஏந்தி வீட்டிலும் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர தமிழகத்தின் மேலும் பல இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும், உலகப் பரப்பெங்கும் தமிழர் வாழும் இடங்கள் அனைத்திலும் இன்று மாவீர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *