முக்கிய செய்திகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன

521

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என்று பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இந்தக்கால பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதனால் நினைவாலயத்தின் புனித தன்மை கெடாதவாறு நடந்து கொள்ளுமாறு கோரி மும்மொழிகளிலும் “புனிதம் காப்போம்” என்ற தலைப்பிலான பதாதைகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபனின் பங்களிப்பில் புதன் கிழமை இரவு கட்டப்பட்டன.

அந்தப் பதாதை கட்டப்பட்டு சில மணி நேரத்தில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணிக்கு, இரண்டு காவற்துறை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் வந்த சிவில் உடை தரித்த இருவர் அந்த பதாதைகளை அறுத்துக்கொண்டு தமது உந்துருளியில் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு சாதனத்தில் பதிவாகியுள்ள நிலையில், இன்றையநாள் வியாழக்கிழமை மதியம் மீண்டும் அப்பகுதியில் புதிதாக மும்மொழிகளில் பதாதைகள் கட்டப்பட்டு உள்ளன.

அதேவேளை கடந்த 14ஆம் நாள் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்றவர்கள், தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை அச்சுறுத்தியிருந்தனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியதுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என்று தெரிவித்ததை அடுத்து, வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக பணியாளர்களை அமர்த்தி முழுமையாகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *