முக்கிய செய்திகள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்

1137

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Today) பத்திரிகை நிருபரும் இந்திய தூதர்சனின் (இந்தியத் தொலைக்காட்சி நிலையம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.

“இந்தியா ருடே” நிருபர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார்.

அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார்.

பேச வலுவற்று, நடக்க வலுவற்றுத் துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது.

“எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”

ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.

படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

இன்று ஓரளவு தெம்புடன் இடையிடையே கண்களை திறந்து பார்த்தார் திலீபன் ஆனால் உடல் முழுவதும் ஒரு நோவும் வாயும் வறண்டு உதடுகள் பிளந்து கிடந்தன. மாலை 5 மணியளவில் மீண்டும் ஆழ்ந்து மயங்கிவிட்டான் திலீபன் நாடித்துடிப்பு 140 ஆக உயர்ந்திருந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *