திருநெல்வேலி, பாற்பண்ணை பிரதேசம் முடக்கப்பட்டு கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது

38

யாழ்ப்பாண மாவட்டத்தில், திருநெல்வேலி, பாற்பண்ணை பிரதேசம், முடக்கப்பட்டு கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கும், உள்ளே செல்வதற்கும், மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களில், 127 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்களில், 51 பேர் திருநெல்வேலி மத்தி – வடக்கு கிராம அலுவலர் பிரிவில் வசிப்பவர்கள் என்பதால், குறித்த பிரதேசம் இன்று தனிமைப்படுத்தப்பட்டு, சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் விளக்கமளித்த, அரசாங்க அதிபர் மகேசன், அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா ஆரம்ப பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்தப் பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் ஒரிரு நாள்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணம் மாநகர மற்றும் திருநெல்வேலி நகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *