தீக்கிரையான கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தொடர்பாக ரணில் இதுவரை எதுவித பதிலும் தரவில்லை – விக்னேஸ்வரன்

1261

கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 62 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள வடமாகாணசபைக் கட்டத்தில் இடம்பெற்றபோது, அதில் உரையாற்றிய முதலமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

16 ஆம் நாள் இரவு கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ பரவி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மறுநாள் தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாணசபை அவைத்தலைவர், சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் அங்கு நேரில் சென்று நிலமையை நிலமையை பார்வையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தால் அங்கிருந்த வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொருவரும் பல இலட்சம் ரூபா வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உண்டு என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும், அதன்போதே அவர் கொழும்பு சென்றவுடன் பதிலளிப்பதாக கூறியிருந்தார் என்றும் முதலமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாகவும், வெளிநாடு சென்றுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் அவரிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் தாம் பெற்ற வங்கி கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளதை வடமாகாண மீன்பிடி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் இன்றைய சபை அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் குறித்த வர்த்தகர்களிற்கு வழங்கிய கடன்களை செலுத்துவதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஊடாக விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *