தீவகத்தில் கல்வி, சுகாதார வசதியை மேம்படுத்தவேண்டும்!

1176

நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் வடமாகாண சபை சுகாதார, கல்வி வசதியை வழங்க வேண்டும் எனவும், தீவக பகுதிகளில் கடமையாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் தீவகப் பிரதேசங்களுக்கு சென்ற விஜயகலா மகேஸ்வரன், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியின்போது தீவகத்தில் இருந்தவர்களால் கல்வி பின்னிலையை அடைந்துள்ளது எனவும், மீண்டும் மாணவர்களைக் கல்வியில் உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு, எங்களுடைய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்றதும் மாலை நேர இலவச வகுப்புக்களை நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய தீவுகளில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை கோட்டக்கல்வி அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்க உள்ளதாகவும், அதற்கான நிதியை தனது சொந்த வசதியில் தான் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்த வகுப்புக்கள் எதிர்வரும் சனவரி மாதம் முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பகுதி மாணவர்களுக்கு தொழில் நுட்ப ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என்பது இல்லாத நிலை காணப்படுவதாகவும், இந்த பாட ஆசிரியர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும் எனவும், இதனை வட மாகாண சபை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியில் வட மாகாண கல்விக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பிரதேசம் முன்னேற வேண்டுமானால் தொழில் நுட்ப துறையில் முன்னேற்றமடைவது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கு கடமையாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிப்பதன் மூலமே, தீவக வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும், அது தவிர இங்கு வரும் அரச அதிகாரிகளுக்கு விடுதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *