முக்கிய செய்திகள்

தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க போரால் பாகிஸ்தானுக்கே இழப்பு என்று பாகிஸ்தானின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்

493

தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க போரால் பாகிஸ்தானுக்கே இழப்பு என்று பாகிஸ்தான் நாட்டின் தலைமை அமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக பெறும் பாகிஸ்தான், அதற்காக எதுவுமே செய்யாத காரணத்தால் அதற்கான நிதியுதவியை நிறுத்திவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் அந்த கருத்துக்கு கீச்சகப் பக்கப் பதிவின் மூலம் பதிலளித்துள்ள பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான், பாகிஸ்தானை குற்றம் சாட்டும் அதிபர் டிரம்பின் முன்னர் சில ஆதாரங்களை முன்வைப்பதாக கூறியுள்ளார்.

செப்டெம்பர் 11இல் அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்தில் இணைய பாகிஸ்தான் முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த அந்த போரில், 75 ஆயிரத்திற்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர் என்றும், மேலும் பாகிஸ்தானின் பொருளாதாரம் 123 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பாகிஸ்தானின் பொருளாதாரம் 123 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்த நிலையில், தமக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்த உதவி 20 பில்லியன் டொலர்கள் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் பழங்குடிப் பகுதிகள் அழிக்கப்பட்டன என்றும், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர் எனவும் தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் சாதாரண பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை மோசமாக பாதித்தது என்று விபரித்துள்ளார்.

ஆனால் அதற்கு பிறகும் பாகிஸ்தான் தனது நிலத்தையும், வான் பகுதியையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் பாகிஸ்தானின் இது போன்ற தியாகங்களை தங்களுக்காக செய்த வேறு எதாவது ஒரு நட்பு நாட்டின் பெயரை அதிபர் டிரம்பால் சொல்ல முடியுமா என்றும் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் தோல்விகளுக்கு பாகிஸ்தானை பலியாடாக மாற்றுவதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் இருக்கும்போதும், அங்கு, இன்றும் தாலிபன்கள் வலுவாக இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும் என்றும் பாகிஸ்தான் நாட்டின் தலைமை அமைச்சர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *