தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

405

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிலத்தடி நீர் ஆய்வு வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

இதில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் டெல்லி மேல்-சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், அர்ஜூன் ராம் மேஹ்வால், மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதில் அங்குள்ள நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் காட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சேனிக் ஆகிய உலோக மாசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார்.

அதேபோன்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளோரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் 100 நாட்களாக நடாத்திய போராட்டம் நடாத்தியதை அடுத்து அந்த ஆலை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டமை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *