தென்னிலங்கையின் விருப்பிற்கு இசைவாக யாழ். நிலவரம்?!

885

யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. தெருவெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல் எல்லாத் தெருக்களிலும் ஊர்ந்து திரிகின்றன.கைகளில் ஆயுதம் ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள் மிரட்சியான பார்வையுடன் மக்களைப் பார்க்கின்றன.

திடீர் சுற்றிவளைப்புக்கள், சோதனைகள் என்று கடந்த 10 நாட்களாக யாழ். குடாநாடு மீண்டும் பயங்கரத்தைப் பூசிக்கொண்டுள்ளது.இதற்குக் காரணம்,தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களும், பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுச்சம்பவங்களுமாகும்.

நல்லூரில் நீதிவான் இளஞ்செழியனின் மெய் பாதுகாவலரான ஹேமச்சந்திரவின் துப்பாக்கியை பறித்து அவர் மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து யாழ். குடா நாட்டில் வாள் வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகாரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

தன்னை இலக்கு வைத்து அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதாக நீதிபதி இளஞ்செழியன் கூறியிருந்தார். ஆனால் பொலிஸ் அத்தியட்சகர் அச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கூறும்போது, தமது விசாரணைகளில் அந்த துப்பாக்கிச் சூடு நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட வில்லை என்றும், அது ஒரு தற்செயல் சம்பவம் என்றும் கூறியிருந்தார்.

இதில் நீதிபதியும், பொலிஸ் அத்தியட்சகரும் கூறுகின்ற வாக்கு மூலங்கள் வேறுபட்டுள்ளன. இதில் யார்? கூறுவது பொய் என்பதையும், எது உண்மை என்பதையும் விசாரணைகளின் முடிவுகளே வெளிப்படுத்தப்போகின்றன.

ஒருவேளை பொலிஸ் அத்தியட்சகர் கூறுவது பொய் என்று நிறுவினால்,பொது மக்களுக்கு பொலிஸாரின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். சமூகத்தில் நடக்கின்ற குற்றங்களை நீதிபதிகள் நேரடியாக நின்று பார்த்து தீர்ப்புகளை வழங்குவதில்லை. பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளையும், சாட்சிகளையும் வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொலிஸார் கூறுவது பொய்யாக இருக்கின்றது என்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் தீர்ப்புகள் சரியானது தானா? என்ற கேள்விகளையும் இந்த சம்பவம் தோற்றுவிக்கும்.

இவ்விடயம் பொலிஸாரின் கடமை மற்றும் பொறுப்பு தொடர்பான சில கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. அதாவது பிரச்சினைகளை அணுகும் பொலிஸார் தமது துப்பாக்கியை குற்றவாளி பறிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தாரா? துப்பாக்கி பறிப்பு எதிர்பாராத ஒரு சம்பவமாக இருந்தால்,குற்றவாளி 8 அடி தூரத்தில் துப்பாக்கியுடன் நின்றிருக்கையில் அவனை நோக்கி மற்றொரு பொலிஸ் அதிகாரியால் குறி பார்த்து சுட முடியவில்லையாயின் பொலிஸாரின் பயிற்சி பயனற்றதாக போய்விட்டதா?என்ற கேள்விக்கு இதுவரை விடை காணப்படவில்லை.

ஏற்கனவே யாழ். குடா நாட்டில் சமூக விரோதச் செயற்பாடுகளும்,வாள் வெட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்,நல்லூர் சம்பவமானது வாள் வெட்டுக் குழுக்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

அதாவது பொலிஸார் தமது துப்பாக்கிகளை பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களாகவும்,துப்பாக்கியை முறையாகப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். பொலிஸாரை மடக்கிப் பிடித்து விடலாம். அல்லது பொலிஸார் மீது தாக்குதலை நடத்தலாம் என்றவாறான துணிச்சலை நல்லூர் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இது நாள்வரை வாள் வெட்டுக் குழுக்கள் கூலிக்கு ஒருவரைத் தாக்குவதிலும், கொலை செய்வதிலும் ஈடுபட்டபோதும்,பொலிஸார் மீது எவ்விதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால் கடந்த வாரம் கொக்குவில் பகுதியில் நீதி மன்ற அழைப்பானையை வழங்கச் சென்ற இரண்டு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்கள் மீது வாளினால் சரமாறியாக வெட்டியுள்ளனர்.

இதேபோல் தென்மாராட்சியில் படையினர் இருவர் மீதும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இந்த நிலைமையானது தொடர்ந்தால்,மீண்டும் படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து பயங்கரவாதத்தை நோக்கி இளைஞர்கள் இலகுவாக நகர்ந்து விடுவார்கள் என்றும், பெரும்பாலும் தமிழ் இளைஞர்கள் நேர்த்தியான ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதாலும், விடுதலைப் புலிகளால் யுத்தகாலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இந்த இளைஞர்களின் கைகளுக்கு கிடைத்துவிட்டால் இன்று வாள்களுடன் நடமாடும் இந்த சமூக விரோதிகள், நாளை ஆயுதங்களுடன் படையினருக்குச் சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிடுவார்கள் என்ற அச்சத்தை அரசுக்கும் படையினருக்கும் கொடுத்துள்ளது.

பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அவசர விஜயத்தை மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தன் பின்னர்,யாழ். குடாநாட்டி ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிப்பதற்கு பொலிஸாருடன் மேலதிகமாக விஷேட அதிரடிப்படையினரையும் கடமையில் அமர்த்தி நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டின் தெருவெங்கும் படையினரின் பிரசன்னம் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என்றும். படையினரின் எண்ணிக்கை குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்றும் மூச்சுக்கு முன்னூறு தடவை கூறியவர்கள் இப்போது நடப்பவற்றைப் பார்த்து மௌனித்துப்போய் இருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் சம்மந்தம் இருக்கின்றது என்றவிதமாகவே, அரசாங்கமும்,வட மாகாண முதலமைச்சர் மற்றும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறுவதானது,முன்னாள் விடுதலைப் புலிகள் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நல்லூரில் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து சுட்ட சம்பவத்தில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவதே சம்மந்தப் பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாள் வெட்டுக் குழுக்களில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஈடுபடகின்றார்கள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டாகும்.

இக்குற்றச் சாட்டை முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தெளிவு படுத்தியிருப்பதுடன்,முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை மேலும் மேலும் துன்பத்திற்குள் தள்ளிவிடுவதற்கே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழி வகுக்கும் என்றும் கூறியிருந்தார்கள்.

வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்களாக தற்போதும் யாழ்ப்பாணச் சிறையில் பல இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் யாரும் உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரசாங்கத்திற்கு துதி பாடுகின்றவர்களும். சூழலை ஆராய்ந்து அறியாதவர்களும் எடுத்த எடுப்பிலேயே,வாள் வெட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களில் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே ஈடுபடுகின்றார்கள் என்று குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் படையினர் நடமாட்டம், சுற்றிவளைப்புக்கள் என்று யாழ்ப்பாணத்தின் நிலைமை மாற்றமடைவதைப் பார்த்தால்,முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும், தற்போதை நல்லாட்சியின் முக்கிய அமைச்சர்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற ‘மீண்டும் புலி வருகின்றது’ என்ற கதையை உயிரோட்டத்துடன் காட்ட முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

தென் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு,தமிழ்மக்களை எப்போதும் ஆயுதங்களின் நிழலிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற தந்திரோபாயமே இருக்கின்றது. அதை நடைமுறைப்படுத்த இங்கு நடக்கும் வாள் வெட்டுக்களும், வன்முறைகளும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாகவே தெரிகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *