முக்கிய செய்திகள்

தொல்லியல் திணைக்களம் இனம்சார்ந்து இயங்குவதால் மன்னாரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

918

இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஒரு இனம் சார்ந்த, ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாக மன்னாரில் இயங்கிக் கொண்டு இருப்பதனால், அங்குள்ள மக்கள் வீடுகள் அமைக்க முடியாத நிலமைகள், விளையாட்டு மைதானங்கள் புனரமைக்க முடியாத நிலமைகள் காணப்படுகின்றன என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

யாவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழ் லூர்து நகர் என்ற பெயரில் 102ஆவது மாதிரிக்கிராமம் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கான விளையாட்டு மைதானம் நறுவிலிக்குளத்தில் புனரமைக்கப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்த வேலை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது எனவும், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அதனை நிறுத்தி வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கேதீஸ்வரத்தில் மக்கள் குடியேற இயலாது எனவும், நானாட்டான் இராசமடுவில் விட்டுத்திட்டம் கட்ட முடியாது என்றும், இதனால் கிடைக்கப் பெறுகின்ற வீட்டுத்திட்டங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தடை செய்து வருகின்றது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஒரு இனம் சார்ந்த ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாகத்தான் இங்கே செயற்படுகின்றது என்றும், ஆகவே தொல்பொருள் திணைக்களத்தால் தடையாக உள்ள மக்களுக்கான அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *