தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது

419

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது எனவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அசாமில் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அந்த மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது என்றும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் குடியேறிய வங்கதேசத்தவர்ககளை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படியே தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் பெயரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் இந்த பட்டியலில் விடுபட மாட்டார்கள் என்றும் இன்று இந்த விவகாரம் தொடர்பில் மாநிலங்கள் அவையில் பதிலளித்துப் பேசிய இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கிட்டத்தட்ட 40 இலட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *