தையிட்டியில் அனுமதியின்றி வடமாகாண ஆளுநரால் விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

461

தையிட்டியில் 20 பரப்பு காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

விகாரை அமைப்பதற்காக ஆவணங்கள் வலி.வடக்கு பிரதேச சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும், பிரதேச சபை இதுவரை அனுமதி வழங்காத நிலையில் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது.

தையிட்டியில் போருக்கு முன்னர், பிக்குகளுக்குச் சொந்தமான காணி இருந்ததாகவும், போர் நடவடிக்கைகளால் அந்தக் காணியிலிருந்து அவர்கள் வெளியேறியிருந்தார்கள் என்றும், தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதும் அந்தக் காணிக்கு அவர்கள் மீளவும் திரும்பி வந்து, காணியை அளவிட்டிருந்தார்கள் என்றும் கூறப்படும் நிலையில், விகாரைக்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

பெருமளவு இராணுவத்தினரும், பெளத்த பிக்குகளும் பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம் எனவும், சமாதானம் நல்லிணக்கம் என்பவற்றிற்கான செய்தியை வடபகுதி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் தலமாக இது அமைய வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ ஆலயத்தில் இந்து, பௌத்த தெய்வங்களை காண முடியாது எனவும், முஸ்லீம் சமயமும் அவ்வாறுதான் என்றும், ஆனால் பௌத்த விகாரையில் முருகன், கணபதி, காளி, பத்தினி தெய்வங்கள் உள்ளே இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தமிழில் புத்த பெருமானின் போதனைகளை தேரர்கள் சொல்லவேண்டும் எனவும், அப்போதுதான் வடபகுதி மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்பதுடன், வேற்றுமை உணர்வு ஏற்படாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ சமயத்தை, முஸ்லீம் சமயத்தை பின்பற்ற வேண்டுமானால் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் எனவும், ஆனால் புத்த சமயத்தினை பின்பற்ற பெயர்மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *