முக்கிய செய்திகள்

தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் தொற்று

188

யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது, 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 641  பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது, 7 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலோலியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அளவெட்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும்., மானிப்பாயைச் சேர்ந்த ஒருவருக்கும், நவாலியைச் சேர்ந்த ஒருவருக்குமே, நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

வவுனியா பொது மருத்துவமனை  தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது,

இதனிடையே, மந்திகை மருத்துவமனையில் கொரோனா அறிகுறிக்களுடன் அனுமதிக்கப்பட்ட புலோலியை சேர்ந்த இளைஞனுக்கு  தொற்று ஏற்பட்ட வழி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர் 3 நாட்களுக்கு முன்னர் மருதனார்மடத்தில் உள்ள வாகனத் திருத்துமிடத்துக்கு சென்றிருந்ததாக, சுகாதாரப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து,  மந்திகை ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 காவல்துறையினர், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் கடமையாற்றும் தாதி ஒருவர் உள்ளிட்ட 22 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட இந்த  தொற்றாளர்களில், காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 06 பேரும், கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த 04 பேரும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *