முக்கிய செய்திகள்

தொல்பொருள் ஆய்வுகளின் போது ஐ.நா மரபுரிமை அமையத்தின் மேற்பார்வை

145

தமிழர் தாயக பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளின் போது சர்வதேச ஆய்வாளர்களையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பீட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா மரபுரிமை அமையத்தின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்றும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு நேற்று தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், தவிசாளர் தனது பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதன்போது தமிழர் தாயக பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வு செய்யும் போது எமது அடையாளங்கள் ஆய்வாளர்களாலேயே திட்டமிட்டு மாற்றப்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குருந்தூர் மலையில் அகழ்வின் போது கண்டறியப்பட்ட பல்லவர் கால தாராலிங்கம் கூட, பௌத்த மத அடையாளமாக சித்தரிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய தவிசாளர் சுரேன், இதனால் தொல்பொருள் திணைக்களம் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டுமானால் ஒரு ஐ.நா மேற்பார்வையின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்தார்.

இந்த தீர்மானத்தை சபையினர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *