நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அரைப்பங்காக குறைக்கவுள்ளதான ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் திட்டம் தொடர்பில், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார்.
இன்று காலை 8.15 அளவில் ரொரன்ரோ நகர மண்டபத்தில் ஊடக மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள நகரபிதா ஜோன் ரொறி, அதன்போது இந்த விடயம் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 9 மணிக்கு Queen’s Parkகில் முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்தல் ஒன்றினை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரொரன்ரோ நகரபிதாவின் இந்த ஊடக மாநாடு கூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது தெரிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள 47 உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 25ஆக குறைப்பதற்கு டக் ஃபோர்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் குறித்த தகவல்கள் நேற்று இரவு வெளியான நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதபபிரதிவாதங்களும், விமர்சனங்களும் ஏற்பட்டுள்ள நிலையிலேயே, ரொரன்ரோ நகரபிதா இன்று காலையில் அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த முடிவு சனநாயகத்திற்கு எதிரானது எனவும், பொறுப்பற்ற செயல் என்றும் நகரசபை உறுப்பினர் ஜோஷ் மத்தியூ தெரிவித்துள்ள நிலையில், இது அதிகார துஸ்பிரயோகம் என்று நகரசபை உறுப்பினர் ஜெனட் டேவிசும் சாடியுள்ளார்.
எனினும் டக் ஃபோர்ட்டின் இந்த முடிவினை ஆதரிப்பதாகவும் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.