யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதேவேளை சாகும் வரைாயான உண்ணாவிரத போராட்டத்தை இரண்டு மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர். விஞ்ஞான பீட மாணவர்களே உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று இரவு நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அத்துடன் அப்பகுதியெங்கும் புலனாய்வாளர்களும், காவல்துறையினரும் பணியில் இருந்தனர்.
இத்தனை தடைகளை உடைத்துக்கொண்டு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தனர்.
பின்னர் மிலேச்சத்தனமான செயலைக் கண்டித்து பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன்னால் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
இரவு இரவாக முன்னெடுக்கப்பட்டபோராட்டம் கொரோனா வதிமுறைகளை காரணம் காட்டி காவல்துறையினரும், பொதுச்சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து விடுத்த அறிவித்தலை அடுத்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவ்விடத்தில் கூடியிருந்தவர்கள் கலைந்துள்ளனர்.