முக்கிய செய்திகள்

நினைவேந்தலை வீடுகளில் இருந்தே, முன்னெடுக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள்

1567

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே, முன்னெடுக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தனது முகநூலில், பதிவிட்டுள்ள காணொளி ஒன்றில்,

“நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது.

எனினும் Zoom தொழில்நுட்பத்தின் உதவியோடு இணையத்தளத்தின் வழியாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.

நாளை மாலை 06.00 மணிக்கு, ஏற்கனவே சமயத் தலைவர்கள் அறிவித்ததைப் போன்று, அனைத்து ஆலயங்களிலும் மணியை ஒலிக்கவிட்ட பின்னர், 06.15 மணியில் இருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு தொழில்நுட்பம் வாயிலாக ஒன்றிணைவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, பொதுமக்கள் தமது வீடுகளிலேயே அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“எங்களுடைய மக்களின் இழப்பை நினைவு கூர்வதற்கு மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டுச் செல்வோம்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டும் என்பதுடன்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்” என்றும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *