சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்த்தன, தனது அலைபேசியில் இருந்த தரவுகளை அழித்து விட்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அதனை ஒப்படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த, டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்தின் பொறுப்பதிகாரியான, சம்பத்குமார சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலேயே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தனது அலைபேசியை ஒப்படைத்திருந்தார்.
அலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீளப் பெற முடியவில்லை என்றும் டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
அதேவேளை, நிலந்த ஜயவர்த்தனவின் மடிகணினியில் இருந்த முக்கியமான தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், அழிக்கப்பட்ட 2.6 மில்லியன் ஆவணங்களில், 210 ஆவணங்கள் தவிர ஏனையவை மீட்கப்பட்டு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சாட்சியம் அளித்துள்ளார்.