ரொறன்ரோவில் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, சரியான பராமரிப்பின்றி, நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருந்தனர் என்று கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாங்கள் அங்கு சென்ற போது, மலம் மற்றும் வாந்தி என்பன இல்லத்தின் தளங்களிலும் சுவர்களிலும் நிறைந்து காணப்பட்டதாகவும், புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கனேடிய இராணுவம் கூறியுள்ளது.
கனேடிய இராணுவத்தின் இந்த இறுதி அறிக்கை, ஒன்ராறியோ நீண்டகால பராமரிப்பு இல்ல ஆணைக்குழுவிடம் ஏப்ரல் 30ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் உள்ள இரண்டு பராமரிப்பு நிலையங்கள், இதயத்தை நொருக்கும் வகையிலும் திகிலூட்டும் வகையிலும் இருந்தன என்றும் அந்த அறிக்கையில் கனேடிய இராணுவம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, ஏழு நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்த பெருமளவானோர் கைவிடப்பட்ட நிலையில், கனேடிய இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.