முக்கிய செய்திகள்

நீதித்துறையின் தோல்வி

312

நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் உள்ளிட்டவர்கள், விடுவிக்கப்பட்டது நீதித்துறையின் தோல்வி என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின், பணிப்பாளர் நாயகம், டேவிட் கிரிபித்ஸ் (David Griffiths) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வழக்கின் சரிவானது, ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதியை உறுதி செய்வதில் தொடர்ந்து தோல்வியடைந்து வரும், சிறிலங்கா அதிகாரிகளின் இன்னொரு வருந்தத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.

இந்த படுகொலை தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிப்பதில், சட்டமா அதிபர் திணைக்களம் ஆர்வம் காட்டவில்லை.

அரசுடன் இணைந்தவர்கள் வரலாற்று தவறுகளுக்கு தண்டனையை அனுபவிப்பதில் இருந்து தப்பிக்க கூடாது.

பொறுப்புக்கூறல் இல்லாமல், இந்த இருண்ட அத்தியாயத்தில் இருந்து சிறிலங்கா மீள முடியாது,

உடனடியாக ஒரு புதிய முழுமையான, பயனுள்ள மற்றும் பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணையைத் தொடங்க வேண்டும்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படு கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வர வேண்டும்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தண்டனையில் இருந்து தப்பித்தல், முடிவுக்கு கொண்டு வரப்பட்டு,  பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம்  தீவிரமாகச் செய்யற்பட  வேண்டும். என்றும், அனைத்துலக மன்னிப்புச் சபையின், பணிப்பாளர் நாயகம், டேவிட் கிரிபித்ஸ் (David Griffiths) வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *