முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

823

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை, 2009ம் ஆண்டின் போர் முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது.

ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் நீதிக்குப்பதிலாக வெறும் மௌனத்தையே பதிலாக வழங்கிவருகின்றது.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வேளையில் கூட தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன். அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன் போது படுகாயப்படுத்தப்பட்டிருந்தனர்.

பிபிசி தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நிமலராஜன் படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையினை எதிர்பார்த்து கிடப்பிலுள்ளது.

நாளை யாழ்ப்பாணத்தில் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 3.00 மணிக்கு படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியிலும் தொடர்ந்து அமையத்திலும் நிமலராஜனின் நினைவேந்தல் நினைவுகள் இம்முறையும் நடைபெறவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *