விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சங்குளம் என்ற கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
விபத்து ஏற்பட்டபோது, அங்கு 89 க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 31க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், காயமடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன என்றும், இவற்றில் 20க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.