முக்கிய செய்திகள்

பன்னாட்டு மனித உரிமை நியமங்களை இலங்கையின் பதிலீட்டுச் சட்டம் திருப்திப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

688

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசைக் கோருவதாகவும், அத்துடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்ட வரைவானது பன்னாட்டுத் தரங்களுக்கு அமைய இருக்கவேண்டும் என்றும், தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற் குழு ஜெனிவா மனித உரிமைகள் சபையில் நேற்றுத் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே, தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்ததாகவும், கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, அநுராதபுரம், திருமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு தமது செயற்குழு பயணம் மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள், மகளிர் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் போன்ற 30க்கு மேற்பட்ட இல்லங்களுக்கு தமது குழு பயணம் மேற்கொண்டதாகவும், இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆரோக்கியமான மாற்றங்கள் தொடர்பில் தமது செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது என்றும் அவர் விபரித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இலங்கையின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் சில சிக்கல்களை தமது செயற்குழு அடையாளம் கண்டது எனவும், குறிப்பாக தடுத்து வைத்தல் தொடர்பான விடயங்களைக் கண்டறிந்தததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் குறைந்துள்ள நிலையிலும், இந்தச் சட்டம் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது எனவும், உடனடியாக இந்தச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசைக் கோருவதாகவும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டவரைவானது பன்னாட்டுத் தரங்களுக்கு அமைய இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *