முக்கிய செய்திகள்

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பின்வாங்கினால் கனடா அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்

1147

உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தயக்கம் காட்டுமாக இருந்தால், கனடா அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

கல்கரி வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்கரியில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய பின்னர் பிரதமரிடம் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதன் போது, அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் பருவநிலை மாற்றம் தொடர்பில் அதிக அக்கறையற்ற கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில், காபன் வெளியேற்றத்திற்கான கட்டணம் உள்ளிட்ட கனடாவின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்குமா என்று பிரமரிடம் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர் ஜஸ்டின் ரூடோ, டொனால்ட் ட்ரம்ப் இன்னமும் அதிபராக பதவி ஏற்காத நிலையில், அவரது கருத்துக்களுக்கு அதிகம் மறுவினை ஆற்ற வேண்டியதில்லை எனவும், தற்போது அவர் எவ்வாறான கருத்துக்களை கூறிவருகின்ற போதிலும், பதவிக்கு வந்த பின்னர் அவர் எவ்வாற செயற்படுகிறார் என்பதனை அவதானிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் உலகளாவிய பருவநிலை மாற்றம் என்பதும், அதற்கு எதிராக அனைவரும் செயற்பட வேண்டும் என்பதும் அரசியல்களுக்கு தொடர்பில்லாத, விவாதங்களுக்கு அப்பாற்பட்ட, அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டிய விடயம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலைப்பாட்டோடுதான் உலகம் நகர்கிறது என்பதே தமது எண்ணம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர், அவ்வாறு ஒருவேளை அமெரிக்கா இதிலிருந்து பின்வாங்குமானால், அது கனடாவுக்கும் கனேயர்களுக்கும் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே தான் அதனை நோக்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும், வலுவான பொருளாதார வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு, கனடா அந்த சந்தர்ப்பத்தினை தனக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *