முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1108

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவல்த்துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக A9 வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் நடாத்திய இந்த போராட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இடத்தில் ஒரு காவல்த்துறை உத்தியோகத்தர்களும் கடமையில் இருக்காமையால்  A9 வீதி முழுவதுமாக முடக்கப்பட்டதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் நிலைகுத்திப் போனதாக கூறப்படுகிறது.

univercity

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் 11.30 மணிக்கு முடிவடைந்த நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக தடைப்பட்டிருந்த A9 வீதியூடான போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேனா தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு வைக்கவேண்டாம் என்ற கோஷத்துடன் குறித்த நிறுவகத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த போர் காரணமாக பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம்வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் திருகோணமலையில் 05 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில்   பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரையில் இவற்றுக்கான நீதி கிடைக்காத  நிலையிலேயே, தற்போது இரண்டு  மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு  நீதி கோரி இன்று யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மனுவுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் சகல பீடங்கங்களின் கல்விச் செயற்பாடுகளும் இடம்பெறாது என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜீவன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர், செய்தியாளர்களிடம்  கருத்து வெளியிட்ட போதே  அவர் இதனை தெரிவித்து்ளளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *