பழ.நெடுமாறனின் ‘தமிழீழம் பிறக்கிறது’ என்ற புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்றம் அழிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளமை கருத்துரிமையை நிராகரிப்பதாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “‘தமிழீழம் பிறக்கிறது’ என்ற பழ.நெடுமாறனின் நூலை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைக் கண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘தமிழீழம்’ என்ற கொள்கை நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை, ஏற்கவில்லை என்ற போதிலும், அந்தக் கருத்துள்ளவர்கள், தங்கள் நிலையை மக்களின் சிந்தனைக்கு வைப்பதற்குரிய, மறுக்க முடியாத உரிமை சனநாயக அரசியல் அமைப்பின் சாரமாக இருந்து வருகிறது எனவும் அவர் விபரித்துள்ளார்.
எனவே அத்தகைய சனநாயக உரிமையை, சிந்தித்து கருத்துகளை வெளிப்படுத்துகிற உரிமையை மறுப்பது சனநாயக அடிப்படைகளை நிராகரிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றமே ‘கருத்துகளை’ அழிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருப்பது அரசியல் சாசன உள்ளடக்கத்தைக் காப்பாற்றுகிற அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய தீர்ப்பை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, பழ.நெடுமாறன் படைப்பு நூலை முழுமையாக அவருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.