பாசிக்குடா கடற்கரை சுற்றுலா விடுதிகளை இலங்கை அரச படையே நடத்துகிறது

3086

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சுயாதீன அறிக்கையாளர் வூவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாசிக்குடா கடலில் காலம் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாசிக்குடா நந்தவனம் விடுதியில் மீனவர்களின் காணி உரிமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ள நிலையிலேயே, இவை தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த இந்தப் பிரச்சனை தொடர்பாக நேரில் ஆராய்ந்த சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளரான வூவி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் மக்களுடைய காணிகள் சூறையாடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாசிக்குடாவில் சிறிலங்கா அரச படையினரே அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடாத்துவதாகவும், சுற்றுலாத்துறையினால் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறைக்காக அதிக காணிகள் சூறையாடப்பட்டுள்ளதனால் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை இந்த சுற்றுலாத்துறை அபிவிருத்தியால் சாதாரண மக்களுக்கும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்ற போதிலும், பாசிக்குடாவில் நிலைமை எதிர்மாறாக இருப்பதாகவும், இந்த மக்களினதும், மீனவர்களின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவர்களது காணிகள் தொடர்பாக வெளிநாடுகளிலும் பேசியுள்ளதாகவும், இந்த நிலை தொடருமானால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாசிக்குடாவுக்கு செல்வதை தடைசெய்ய நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *