முக்கிய செய்திகள்

பாரிய பேரணிக்கு பல்வேறு தரப்பினர் ஒத்துழைப்பு

35

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி, நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பாரிய பேரணியில் ஒன்றிணையுமாறு,  பல்வேறு  தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல் மற்றும் தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் போன்ற தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகின கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட,  சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நாளை புதன்கிழமை கிட்டுப் பூங்காவில் இருந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திடல் வரை மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவதற்கு மாணவர்களாகிய நாம் தீர்மானித்துள்ளோம்.

எனவே தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளை வலியுறுத்துவதற்கான இப் போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அனைவரையும் ஒன்றிணைந்து பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தும், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், ரேலோ இளைஞர் அணி தலைவர் குகதாஸ் உள்ளிட்டவர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *