முக்கிய செய்திகள்

பிரம்டனில் காணாமல் போன 5 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து ஒருவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

343

காணாமல் போன நிலையில் தேடப்பட்டுவந்த பிரம்டனைச் சேர்நத 5 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதனை அடுத்து, 28 வயது ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தனது மகனை இறுதியாக கண்டதாகவும், இன்று காலையில் எழுந்து பார்த்த போது மகனைக் காணவில்லை எனவும், வீட்டின் முன் கதவு திறந்திருந்ததாகவும், குறித்த அந்த சிறுவனின் தாயார் இன்று காலை ஆறு மணியளவில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதனை அடுத்து அதிகாரிகள் தீவிர தேடுதல்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று காலை 7 மணியளிவில், அருகே இருந்த தொடரூந்து பாதை ஒன்றின் அருகே காயங்களுடன் காணப்பட்ட குறித்த அந்த சிறுவன் மீட்கப்ட்டார்.

உயிராபத்தான நிலையிலேயே மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும், அவரது உடல்நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் மோப்ப நாய்களின் உதவியுடனேயே சிறுவன் விரைவாக கண்டுபிடிக்கப்ப்டடதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் பிரம்டனைச் சேர்ந்த 28 வயதான டயன் சிமார்ட்(Dyon Smart) என்பவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் அவர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு, அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாது தப்ப முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *