முக்கிய செய்திகள்

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

1639

லண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் அனைத்துலக நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று இலங்கை அரசாங்கத்தின் 70வது சுதந்திர தின விழா நடைபெற்ற இலங்கைக்கான தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கைது செய்யப்பட்டு காணாமல் போன உறவுகள் எங்கே எனவும், தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் அங்கே சென்ற சிறிலங்கா இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மற்றும் தூதரக அதிகாரிகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நிழற்படங்களை எடுத்த போதிலும், மக்கள் தொடர்ந்தும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மக்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

குறித்த இந்த அதிகாரி இறுதிக் கட்ட போரில் பல மனிதவுரிமை மீறல்களிள் சம்பந்தப்பட்டவர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், குறிப்பாக வைத்தியசாலை, பாடசாலை, மற்றும் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகள் மீது குண்டு தாக்குதல்கள் நடாத்திய படையணிக்கு இவர் தலைமை தாங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரியின் கொலை மிரட்டல் செயலானது பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும், மனித உரிமைக்கும் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலே ஆகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, இந்த இராணுவ அதிகாரியை பிரித்தானிய சட்டத்திற்கு அமைய கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் பிரித்தானிய அரசினை வலியுறுத்தும் வகையில் இன்றைய இநத பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *