முக்கிய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடரும் காட்டுத்தீ -37,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

1013

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 37,000ற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போதும் 160க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்துவரும் நிலையில், தொடர்ந்தும் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மாநில போக்கவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேகமான காற்றும் வரட்சியான காலநிலையும், காட்டுத்தீ பரவலை தீவிரமடைய செய்துள்ள நிலையில், தீப் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்களையும், அவர்களது பெறுமதியான சொத்துக்களையும் முடிந்தவரை பாதுகாப்பதில் அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் இதனையும் விடவும் மோசமான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை விடவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் நாடகளில் எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் மோசமான தீப்பரவல்கள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அனைவரும் எப்போதும் வெளியேறுவதற்கு தயாரான நிலையில் இருக்கவேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் என்று அனைத்து தரப்பினரும் இந்த நிலைமையினைச் சமாளிப்பதற்கு மிகுந்த பிராயத்தனத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 415 பேர் உட்பட, 2,895 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு்ளளனர் என்பதுடன், இதுவரை 1,361,737 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவு காட்டுத்தீக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிவரும் நிலையில், அவர்களுக்கு தம்மாலான உதவிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெயரும் மக்கள் தஞ்சம் நாடும் இடங்களில் உள்ள மக்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வேறு வழிவகைகள் மூலமும் தமது வீடுகளிலும், வளவுகளிலும் இடம்பெயரும் குடும்பங்கள் தங்குவதற்கான இடங்கள் உள்ளதான அறிவிப்புகளை பெருமளவில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தனி அறைகள், முழுமையான வீடுகள், வீட்டுக்கு வெளியே அமைத்துள்ள தற்காலிக குடில்கள் என்று பல்வேறு வழிகளிலும் மக்கள் தமது தரப்பு உதவிகளை வழங்க முன்வந்து, அதனை அறிவிப்பும் செய்து வருகின்றனர்.

தமது வீட்டில் மூன்று அறைகளுடன் கூடிய கீழ்த் தளம் தயாராக உள்ளது எனவும், தமது வீட்டு வளவில் கூடாரத்துடன் கூடிய தற்காலிக தங்குமிட வாகனம் தயாராக உள்ளது எனவும், தமது வளவில் இடம்பெயரும் மக்கள் தமது தங்குமிட வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் உள்ளது எனவும் பல்வேறு மக்களும் தமது அறிவிப்புகளை இவ்வாறு வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல இடம்பெயரும் மக்கள் தமது செல்லப்பிராணிகள், மற்றும் குதிரை, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தமது இடங்களில் விட்டுப் பராமரித்துக் கொள்ளலாம் எனவும் பல்வேறு மக்கள் அறிவிப்பு வெளியிட்டு்ளளனர்.

இடம்பெயரும் மக்களில் சிறப்புத் தேவைக்கு உட்பட்ட மக்கள், நோயாளர்கள் என்று பலரும் காணப்படும் நிலையில், வழக்கமனா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிரமங்களை எதி்ர்நோக்கக்கூடிய அவர்களுக்கு, இவ்வாறான மக்களின் உதவிகள் மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *