பிரித்தானியாவில் தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்

112

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண் ஒருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அம்பிகை செல்வகுமார் என்ற ஈழத்தமிழ் பெண், இன்று முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, அவர் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது குடும்பம் நீண்ட காலமாகவே ஜனநாயகக் களத்தில் குரல் கொடுத்து வந்ததாக அம்பிகை செல்வகுமார் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி, மன வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தாய்நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தான், சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *