முக்கிய செய்திகள்

பிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது

76

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வெளியிடப்பட்ட, பூச்சிய வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தப் புதுப்பிக்கப்பட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரைவில்,  எதிர்கால விசாரணைகளுக்குப் பயன்படுத்துவதற்காக, சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம்  கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்காவில், தமிழர்கள் முஸ்லிம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவது,  சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுவது, ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதில் உள்ள கட்டுப்பாடுகள்,  நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்தும், இந்த புதுப்பிக்கப்பட்ட வரைவில், கரிசனை எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த பணியகம்,  இழப்பீட்டுக்கான பணியகம் ஆகியன வலுவாகவும்,  சுதந்திரமாகவும் செயற்படுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதல், போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடை விதித்தல்  மற்றும் சொத்துக்களை முடக்குதல் போன்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள் இந்த புதுப்பிக்கப்பட்ட வரைவில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *