சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரை போராடும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வாக்குரிமையுள்ள 15 நாடுகள் இதுவரை சிறிலங்காவை ஆதரிக்கும் வகையிலும், பிரேரணையைத் தோற்கடிக்கும் நோக்குடனும் உள்ளன. சில நாடுகள் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டில் உள்ளன. அந்த நாடுகளையும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு நாம் கோரி வருகின்றோம்.
அதேவேளை, இதுவரை எந்தவிதமான நிலைப்பாடுகளையும் தெரிவிக்காமல் அமைதியுடன் இருக்கும் நாடுகளுடனும் நாம் பேசி வருகின்றோம்.
சிறிலங்கா மீது திட்டமிட்ட வகையில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இம்முறை சிறிலங்காவுக்கு அதிக நாடுகள் ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எம்மிடம் உள்ளது. எனினும்,பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.