பிரிட்டனுக்குள் சட்டவிரோதமான வழிகளில் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கை தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதற்கு பிரிட்டனின் உள்துறை அலுவலகம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.
அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய நடைமுறையை ஒத்ததாக அமையக்கூடிய இந்தத் திட்டம் பற்றிய விபரங்களை பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் பிரீத்தி பட்டேல் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 இன் இறுதி வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக புகலிடக் கோரிக்கைகளை விசாரித்து வந்த பிரிட்டன் இப்போது புதிய நடைமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இதுவரையில், ஐரோப்பிய ஒன்றிய நாடு வழியாக பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை, விசாரணைகளுக்காக அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கக்கூடிய ஏற்பாடு பிரிட்டனின் குடியேற்ற சட்ட விதிகளின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இனி, சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைவோரை மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் திட்டமிட்டு வருகின்றது.