முக்கிய செய்திகள்

புதிய அரசமைப்பு விடயத்தில் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு ஆர்வமில்லை என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

424

இலங்கையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட மாட்டாது என்று இலங்கையின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

போர் மற்றும் சமாதானம் தொடர்பிலான அறிக்கையிடல் கற்கை நிலையம் சார்பாக, அமைச்சர் மனோ கணேசனை அமைச்சில் நேற்றுச் சந்தித்த ஊடகவியலாளர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் இலங்கையின் தலைமை அமைச்சருக்கும், அரச தலைவருக்கும் எந்த ஆர்வமும் இல்லை எனவும், புதிய அரசமைப்பு என்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சூடாகப் புதிய அரசியல் அமைப்பில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு அரச கரும மொழிகளுக்கும் சமனான நிலையை உறுதி செய்யும் விதமாகக் கொண்டுவர இருந்த திருத்ததை தற்போது 21ஆம் அரசமைப்புத் திருத்தம் ஊடாகக் கொண்டுவர உத்தேசித்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசமைப்பில் அரச மொழி குறித்த அத்தியாயத்தில், முதலில் சிங்கள மொழி அரச மொழியாக எழுதப்பட்டுள்ளதுடன், அடுத்த வரியில் தனியாகவே தமிழ் மொழியும் அரச கரும மொழி என்று கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர், தமிழ் மொழியும் அரச கரும மொழி என்று கூறப்பட்டிருப்பதன் ஊடாக தமிழ் மொழிக்குரிய சம தகுதி தொடர்பில் சிறு சிக்கல் உள்ளதாக தோன்றுவதாக விபரித்துள்ளார்.

புதிய அரசமைப்பு ஊடாக இதனை திருத்தி சிங்களம, தமிழ் மொழிகள் அரச கரும மொழிகள் என்று எழுத உத்தேசித்திருந்த போதிலும், தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படமாட்டாது எனவும், ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை கொண்டு வருவதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை என்றும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *