புதிய அரசியலமைப்பு வரைவுக்கான முன்மொழிவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அனுப்பி வைத்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பம் தெரிவித்தார்.
சிறிலங்காவின் தேசங்களுக்கு இடையிலான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்புடன் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டயோசனைகளை மையப்படுத்தியே அம்முன்மொழிவுகள் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள முன்மொழிவில், அரசியலமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு முன்தாக அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் தேவைப்பாடுகள் சம்பந்தமாக காரணங்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, சிறிலங்காவானது ஒரு மதசார்புப் படிமுறையற்ற அரசாக உருவாவதற்கு சிங்கள பௌத்த சமூகமானது சிறிலங்காவின் பல்வேறு மக்கள் கூட்டங்களுக்கிடையே சமூக ஒப்பந்தமொன்று தேவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு அந்த ஒப்பந்தம் ஊடாக புதியதோர் பல்-தேசிய சிறிலங்கா அரசு தோற்றம் பெற வேண்டும் என்றும் தமிழ் மக்களினது தனித்துவமும் அவர்களது சுய நிர்ணய உரிமையும் முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் அரசியல் விருப்பார்வங்களும் அங்கீகரிக்கப்படல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைவிடவும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்க வேண்டும், தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கள், முழு சமஷ்டி அரசின் இறைமையானது அதன் அங்கத்துவ அலகுகளில் உய்தறியப்படுதல், சிங்களம், தமிழ், ஆகியன அரசின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.