முக்கிய செய்திகள்

புதிய அரசியல் அமைப்பு தேவை என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தை எதிர்க்காத எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பினர் பெற்றுக் கொண்டனர் என்பதை சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்

354

சமஷ்டி குறித்து சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் அவை கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், சமஷ்டி கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமது பெயர் பலகையை இலங்கை தமிழரசுக் கட்சி வைத்துள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கோட்பாடு குறித்த தமது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்துவார்களா எனவம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவொருபுறமிருக்கையில் தந்தை செல்வாவினால் சமஷ்டி கோட்பாட்டினை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் இலங்கை தமிழரசுக் கட்சி எனவும், ‘பெரடல்’ கட்சியேன்றே பொதுவாக அழைக்கப்பட்ட இந்தக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன், கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமஷ்டி குறித்த தமது கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனநாயக முறையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அதியுச்சமாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்றே கோரப்பட்டது எனவும், அந்த சமயத்தில் எங்கும் சமஷ்டி என்ற பெயர் பலகை அவசியமில்லை என்று அந்த தலைவர்களால் கூறப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் விபரித்துள்ளார்.

அந்த முயற்சிகள் தேல்வியடைந்தமையால் தான் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் தற்போதுள்ள சம்பந்தன் போன்றவர்கள் அனைவரும் தனி நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள் எனவும், இவ்வாறு தமிழ்த் தலைவர்களின் முழுமையான ஒத்துழைப்புடனும், ஆதரவுடனும் தான் அனைத்து விடுதலை இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இந்த போராட்டத்தில் பல்லாயிரம் போராளிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன், பல்லாயிரம் பொதுமக்கள் உயிர்களைத் துறந்துள்ளனர் எனவும், கடந்த 2009இல் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சனநாயக நீரோட்டத்தில் கலந்து மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் என்று போட்டியிட்ட அனைத்திலும் சமஷ்டி ஆட்சி முறைமை மூலம் தான் எமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை ஓரளவு திருப்தி செய்யப்படும் என்பதுடன், எமது மக்களின் தியாகங்களுக்கு ஓர் அர்த்தம் இருக்கும் எனக்கூறியே மக்களிடம் வாக்கு கேட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஏதுவாக புதிய அரசியல் அமைப்பு தேவை என்ற அடிப்படையிலேயே மைத்திரி – ரணில் அரசுடன் இணக்க அரசியல் நடத்தினார்கள் என்பதுடன், அரசாங்கத்தை எதிர்க்காத எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இன்று கூட்டமைப்பின் பேச்சாளர் சமஷ்டி எங்களுக்கு தேவை இல்லை என்று தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கு பொய் கூறி, பின்னர் அதை சமாளிக்க பெயர் பலகை தேவை இல்லை என்று தான் கூறினேன் என்று தமிழர்களுக்கும் பொய் சொல்லுகிறார் எனவும் அவர் சாடியுள்ளார்.

உள்ளடக்கத்தை பிரதிபலிப்பதுதான் பெயர் பலகை. உள்ளுக்குள் சமஷ்டி இல்லை என்றால் பெயர் பலகை தேவை இல்லை தான். ஆகவே சுமந்திரன் கூறியதன் அர்த்தம் சமஷ்டி உள்ளுக்குள் இல்லை என்பது தான். இதேவேளை, இன்று சர்ச்சைகள் எழுந்ததும் மேதாவித்தனமாக அதற்கு வியாக்கியானம் அளித்து ஆணை வழங்கிய மக்களை குழப்பியடிக்கின்றார்கள். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்து விட முடியும் என்றும் நம்பிக்கை கொள்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *