புதிய அரசிலமைப்பிலும் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1190

தற்போதைய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை புதிய அரசியல் யாப்பிலும் அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை கொடுப்பதற்குமான விதந்துரைகளை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க முழுமையான இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமன்றி கத்தோலிக்கத் திருச்சபையின் அதி மேற்றுராணியாரான கர்தினாலும் இதனை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் இந்து, இஸ்லாம் மதங்களின் தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்ப்பதாகவும், அதனால் அரசியல் யாப்பிலுள்ள பௌத்த மதம் தொடர்பான சரத்து தொடர்பில் பிரச்சனையாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு என்ற ரீதியில் சனாதிபதியும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தாங்களும் இவற்றை பிரசாரப்படுத்துவதில்லை எனவும், பௌத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காக, வார்த்தைகளால் அன்றி, செயல் ரீதியாக தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் வார்த்தை ஞாலங்களால் பெளத்தத்தினைப் பாதுகாப்பதாக பிரசாரம் செய்வதற்கு திறமையானவர்கள் என்ற போதிலும், அவர்கள் செயல் ரீதியாக இருப்பதையும் அழித்து விடுகின்றனர் எனவும் அவர் சீற்றம் வெளியிட்டுள்ளார்.

எனினும் செயல் ரீதியாக பௌத்த மதத்தை பாதுகாத்து, அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *