புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.

247

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு நேற்றைய தினம், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த பிக்குவால் திறந்துவைக்கப்பட்டது.

சட்டவிரோதமான இந்த நடவடிக்கை தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்போதே நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை வழங்கியது.
கடந்த 14 ஆம் திகதி நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிவில் பொங்கல் வழிபாடுகளுக்காக மக்கள் சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார், நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கை நேற்றுமுன்தினம் மாற்றி வழக்கு நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைகளில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட விவரங்களை கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியது.
அத்துடன், முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியையும் எதிர்வரும் 24 ஆம் திகதியான இன்று மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்து
இந்த நிலையில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிக்கு தரப்பினரும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தரப்பினரும் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகினர்.

புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தமானி மூலம் பௌத்த விகாரை அமைப்பதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டதாக பிக்கு தரப்பினர் தெரிவித்தனர். எனினும் விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் செட்டிமலை என்றும், செட்டிமலைக் கிராமம் என்றும் செட்டிமலை கிராம சேவகர் பிரிவு என்றும் குறித்த கடிதத்தில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தரப்பினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.
தொல்லியல் திணைக்களத்தின் கடித்தில் குறிப்பிடப்பட்ட இடம் அதுவல்ல என்றும் அவ்வாறான இடம் ஒன்று இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது. அன்றுவரை புத்தர் சிலை அமைக்கும் பணிகளை எவருமே முன்னெடுக்கக் கூடாது என நீதிமன்று இடைக்காலத் தடை விதித்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *