பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறுகிறதா என்று அரசியல், சிவில் பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

924

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறுகின்றனர் எனவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும் என்றும், பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும், அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு காவல்துறையினரின் பலவீனமே அடிப்படைக் காரணம் எனவும், சட்ட ஒழுங்கை அவர்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்திக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்தால், அடுத்தடுத்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்றும், முன்னைய காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததில்லை எனவும் வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமைச் சம்பவத்தில் மறைந்த மாணவி வித்தியாவின் வழக்கில் எதிராளிகளுக்கு ஆதரவாக இங்குள்ள சட்டத்தரணிகள் எவ்வாறு முன்னிலையாகாமல் இருந்தார்களோ, அதேபோல தற்போது நடைபெறும் சமூக விரோதக் குற்றங்களுக்காகவும் சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது எனவும், போரின் பின்னரே இந்தச் சமூக விரோத கலாசாரம் தோன்றியுள்ளது என்றும் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இலட்சம் படையினர் வடக்கில் முகாமிட்டிருக்கும்போது எவ்வாறு இந்தப் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன எனவும், இந்திய மீனவர்களை கைது செய்யமுடிகின்ற சிறிலங்கா கடற்படையினரால் கடல் மூலம் கடத்தப்படுகின்ற கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஏன் கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறையினர் கைநீட்டி காசு வாங்குகின்ற போது அவர்களால் எவ்வாறு சட்ட ஒழுங்கினை காப்பாற்ற முடியும் எனவும், கணவனின் முன்னால் அவரது மனைவியை வன்கொடுமைக்கு உள்ளாக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளதெனில், காவல்துறையினர் இந்தச் சம்பவத்துக்கு வெட்கித் தலைகுனியவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் எனவும், என்னதான் போராடினாலும் ஒரு சில இளையர்கள் அடக்கி ஆளுதல், வன்முறைகளைக் கட்டவிழ்த்தலில் ஈடுபடுகின்றனர் என்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் சரோஜினி சிவசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் பாவனையினை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், எல்லா வன்முறைக்கும் இதுவே அடிப்படைக் காரணியாகும் என்றும், நகருக்குள் மட்டும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடாது கிராமங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்புக்களில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *