முக்கிய செய்திகள்

பெரும் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

539

பெரும் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில், குறிப்பாக தியாக தீபம் தீலீபன் உணவுப் புறக்கணிப்பினை மேற்கொண்ட யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 10.48 தொடக்கம் சிறப்பு வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியு்ளளனர்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில் திலீபனின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டு, பெரும் எழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.

தியாகி திலீபனின் 31 ம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பதாக நினைவேந்தல் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

பருத்தித்துறை மருத சிவன் கோவிலடி வளாகத்தில் போர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பதாக தியாகி திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவீரன் ஒருவரின் தாயார் ஈகைச் சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்திலும் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , முன்னாள் போராளிகளின் பெற்றோர், தமிழ் தேசிய உணர்வாளர்கள் , பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பணம் பல்கலைக்கழகத்திலும் இன்று உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காலை 10.48 க்குப் பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தரும், விஞ்ஞான பீடாதிபதியுமான கலாநிதி பிரின்ஸ் ஜெயதேவன் பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். விரிவுரையாளர்கள், மாணவர்களின் நினைவுரைகள், தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்ட வரலூற்றை விளக்கும் காணொலிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

அதேபோல தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் அடையாள உணவுப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு அவர் உயிர் நீத்த நேரமான 10.50 அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிபிள்ளை, குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர்.

அவ்வாறே தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன்கிழமை மன்னாரிலும் இரண்டு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் சிவகரன் தலைமையில், இன்று புதன் கிழமை காலை 10. 48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றுள்ளது.

இதன் போது தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த உணர்வு பூர்வமான நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும்,மத தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என்று பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது சர்வ மதத்தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணி டெனிஸ்வரன், மன்னார் நகர முதலமைச்சர் அன்ரனி டேவிட்சன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் என்று பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *