முக்கிய செய்திகள்

பொண்ணுக்கு தங்க மனசு: விஜயகுமார் கதாநாயகன் ஆனார்

2204

தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்து, நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் விஜயகுமார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இன்றும் புகழுடன் நடிப்பைத் தொடருகிறார்.

டைரக்டர் பி.மாதவன், “பொண்ணுக்குத் தங்கமனசு” என்ற படத்தில் கதாநாயகனாக விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார்.

நடிகர் கமலஹாசன் ஹீரோவாக வளரத்தொடங்கியிருந்த காலகட்டத்தில் விஜயகுமாரும் ஹீரோவாக நடித்தார். இதே நேரம் நடிகர் ரஜினி, வில்லனாக தன் திரையுலகப் பிரவேசத்தைத் தொடங்கியிருந்தார்.

இந்த வகையில் ரஜினி, கமல் இருவருடனும் சம கேரக்டர்களில் நடித்த அனுபவமும் விஜயகுமாருக்கு உண்டு. பின்னாளில் இதே ஹீரோக்களுக்கு தன்னை `அப்பா’வாக மாற்றிக்கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.

சினிமாவில் பல அவதாரம் எடுத்தாலும் சினிமாவில் நடிக்க விஜயகுமார் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

வருவார்; முயற்சிப்பார்; திரும்பிப் போவார்; மறுபடி வருவார்; போராடுவார்; திரும்பிப் போவார். – இப்படி போராடி, மூன்றாவது முறையாகத்தான் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமம்.

அப்பா எம்.என்.ரெங்கசாமி. அம்மா சின்னம்மாள். அப்பா ஊரில் 2 ரைஸ்மில்களுடன் வசதியாக வாழ்ந்தவர்.

விஜயகுமாருக்கு, அது நிஜப்பெயரல்ல; பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் `பஞ்சாட்சரம்.’ சினிமாவுக்கு வரவிரும்பி இவருக்கு இவராகவே வைத்துக் கொண்ட பெயர் “சிவகுமார்.”

அப்போது ஏற்கனவே சினிமாவில் ஒரு சிவகுமார் நடிக்கத் தொடங்கியிருந்ததால், டைரக்டர் பி.மாதவன் இவருக்கு விஜயகுமார் என்ற பெயரைச் சூட்டினார்.

தனது கலையுலகப் பிரவேசம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

“அப்பா 1918-ல் சென்னை வந்து தம்புசெட்டித் தெருவில் அரிசிக்கடை வைத்தார். 2 வருஷம் அங்கே தொழில் செய்த பிறகு சிங்கப்பூருக்கு போயிருக்கிறார். அப்போது சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து `தர்ம கப்பல்’ போகுமாம். அதாவது, அந்த கப்பலில் சிங்கப்பூருக்கு இலவசமாகவே போகலாம். அப்போது சிங்கப்பூரில் `டிரெய்னேஜ் காண்ட்ராக்ட்’ எடுத்திருந்தவர்கள் வேலையின் பொருட்டும் இப்படி இலவச கப்பலில் ஆட்களை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தில்தான் ஊரில் 2 ரைஸ்மில்களை தொடங்கியிருக்கிறார் அப்பா. தினமும் எங்கள் ரைஸ்மில்லில் இருந்து கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு 100 மூட்டை அரிசி போகும். எங்க குடும்பம் தவிர, வேலையாட்கள் எல்லாம் சேர்த்தால் தினமும் 20 பேருக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு.

நாங்கள் சகோதரர்கள் மொத்தம் ஐந்து பேர். பெரிய அண்ணன் ராமச்சந்திரன் சென்னைக்குப்போய் அங்குள்ள காசினோ தியேட்டர் அருகில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். அடுத்த 2 அண்ணன்கள் சிங்கப்பூர் போய் விட்டார்கள். அடுத்தது நான். எனக்கு ஒரு தம்பி. நானும் தம்பியும் படித்துக் கொண்டிருந்தோம்.

அது 1962-ம் வருஷம். அப்போதெல்லாம் என் பொழுதுபோக்கே சினிமாவாகத்தான் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் ராஜாமணி, நீலா, முருகையா என்ற தியேட்டர்கள் இருந்தன. படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரவில் ரைஸ்மில்லில் தங்கிவிடுவதாக வீட்டில் சொல்லி விடுவேன். படம் போடுகிற நேரத்துக்கு கொஞ்சம் முன்னதாக கட்டிலில் தலையணையை ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி வைத்து, போர்வையை போர்த்திவிட்டு சைக்கிளில் பறந்து விடுவேன்.

சினிமாவில் எனக்கு எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்ற பேதம் எதுவும் கிடையாது. யார் நடித்த படம் என்றாலும் பார்த்து விடுவேன். இப்படி வீட்டுக்குத் தெரியாமல் ரைஸ்மில்லில் படுத்திருப்பதாக `பேர் பண்ணிக்கொண்டு’ படம் பார்க்கப்போனது ஒருநாள் அப்பாவுக்குத் தெரிந்து போயிற்று.

ஒருநாள் இரவு ஏதோ விஷயமாக என்னைப் பார்க்க ரைஸ்மில்லுக்கு வந்திருக்கிறார், அப்பா. அப்போது என் குட்டு உடைந்து விட்டது! காலையில் எழுந்ததும் அப்பா செய்த முதல் காரியம், வீட்டுத் தூணில் என்னைக் கட்டிப்போட்டதுதான்! “உன்னை டாக்டராகவோ, என்ஜினீயராகவோ பார்க்க ஆசைப்பட்டதுக்கு இப்படி சினிமா பார்த்து படிப்பை தொலைச்சு, என் கனவை கலைச்சிட்டியே” என்று வேதனைப்பட்டார் அப்பா.

இதன் பிறகு என்னை அவர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.

பள்ளிக்கூடத்தில் ரொம்ப கண்டிப்போடு பாடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கும்பகோணத்தில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகம் நடத்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வருவதாக ஊர் முழுக்க மைக்செட் கட்டிய வண்டிகளில் விளம்பரம் செய்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்து, கும்பகோணத்துக்கு 40 மைல். ஆனாலும் சிவாஜியை பார்க்கும் ஆவலில் 30 நண்பர்கள் ஆளுக்கொரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பறந்தோம். கும்பகோணத்தில் நாடகம் நடக்கவிருந்த இடத்துக்கு அருகே, ஒரு புளிய மரத்தின் அடியில் சைக்கிள்களை போட்டுவிட்டு மரங்களில் ஏறிக்கொண்டோம்.

40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். கும்பகோணம் மகாமகத்துக்குத்தான் இப்படி கூட்டம் கூடும் என்றார்கள்.

எனக்கு எப்படியாவது சிவாஜியை பார்த்தால் போதும் என்ற நிலை. மரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களின் முகங்கள் மிகச் சிறிதாகத் தெரிந்தன.

அந்த நேரத்தில், சிவாஜியின் குரல் `மைக்’கில் கேட்டது. சிவாஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூட்டத்தினர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற, கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்த, இரும்புத்தொப்பி போலீசார் வந்தார்கள். கூட்டத்தினரை இருபுறமாக பிரித்து, அவர்கள் ஏற்படுத்திய பாதையில் சிவாஜி நடந்து வந்தார். “நடிகர் திலகம் வாழ்க” என்ற கோஷம் விண்ணை முட்டி எதிரொலித்தது. நான் மரத்தில் இருந்தபடி, வைத்தகண் வாங்காமல் பிரமிப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் எனக்குள் மின்னல் மாதிரி ஒரு எண்ணம். சினிமாவில் நடித்ததால்தானே சிவாஜிக்கு இப்படியொரு புகழ்; அவரைப் பார்க்க இவ்வளவு பெரிய கூட்டம்! இவ்வளவு சக்தி வாய்ந்த சினிமாவில் நடிக்க, நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது?- இப்படி நான் நினைத்தபோது எனக்கு 16 வயதுதான்! சென்னைக்கு போனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுமா என்ற தயக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை! சிவாஜியை பார்த்த இரண்டு நாளில், சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டேன்!

அப்போது, எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ரெயில் கட்டணம் 7 ரூபாய்தான். வீட்டில் சொல்லாமல் புறப்பட்டாலும் சென்னையில் கடை வைத்திருக்கிற அண்ணனைப் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசையை சொல்லி விட முடிவு செய்திருந்தேன்.

சென்னைக்கு, என் முதல் ரெயில் பயணம் இவ்வாறாகத் தொடங்கியது.” – இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *