பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தி ஓர் எடுத்துக்காட்டு

821

யுத்தத்தின் போது எமது பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தி குமாரசாமி ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளிவராமல் எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் நடந்தேறின. இராணுவத்தினர் கையில் நடைபெற்ற குற்றச்செயல்களுக்கு ஓர் அடையாளமாக கிருஷாந்தியின் பலாத்காரமும் கொலையும் அமைந்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிருஷாந்தி குமாரசாமியின் ஞாபகார்த்தமாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 21 மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மாணவி கிருஷாந்தி குமாரசாமி, தமது 21ஆவது பிறந்தநாள் வரை வாழவில்லை. வாழவிடவில்லை என்பது தான் பொருத்தம். ஆனால், அவரின் 21ஆவது இறந்த வருட நினைவு தினத்தையாவது நாம் அனைவரும் அவர் இறந்த அதே இடத்தில் கூடி நின்று, கனத்த மனங்களுடன் நினைவு கூருகின்றோம்.

அவரின் இறப்பு இயற்கை மரணம் அன்று. அறுவர் அடங்கிய இராணுவ மிலேச்சக்கூட்டம் அப்பெண்ணை பலாத்காரத்துக்கு உட்படுத்தியது மட்டுமன்றி, கொன்றும் புதைத்து விட்டது. யுத்தத்தின் போது, எமது பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இச்செம்மணி வெளி அக்காலத்தில் ஒரு திறந்த மனிதக் கொல்களமாக மாற்றப்பட்டிருந்தது. இப்பாதையால் பயணிக்கின்றவர்கள் அடுத்த எல்லையை தாண்டும் வரை அவர்களின் உயிர் அவர்கள் வசம் இருந்து விட்டால் அவர்கள் புண்ணியம் செய்தவர்களாகக் கருதப்பட்டார்கள். வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாப்புப் போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நாட்டில் இது போன்ற அவலங்கள் இனிமேலும் நடவாதிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்களை வேண்டி அரசாங்கத்துடன் நாம் மோதிக் கொண்டிருக்கின்றோம். பிழைகள் விசாரிக்கப்படலாம். தண்டனைகள் வழங்கப்படலாம். ஆனால் பிரிந்த உயிரை மீண்டும் திருப்பித் தரக்கூடிய வல்லமை எவருக்கு உண்டு?

செல்வி கிருஷாந்தியினதும் அவரின் தாயார், சகோதரன் பிரணவன் ஆகியோரினதும் அவர்தம் அயலவர் கிருபாகரனதும் மறைவு எம் மக்களால் இன்றைய நாள் நினைவு கூரற்பாலது. வருடாவருடம் நினைவு கூரற்பாலது. எமது மக்களின் கடந்த கால சோக வாழ்க்கையின் அடையாளம் இவர்கள் மறைவு. அவர்கள் அனைவரதும் உற்றார் உறவினர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த துக்கங்களையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதை விட எம்மால் என்ன செய்ய முடியும், இவ்வாறான மிலேச்சச் செயல்கள் எம்மிடையே இனியும் ஏற்படாதிருக்க இறைவன் வழி வகுப்பானாக” என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *