முக்கிய செய்திகள்

பொன்னாலை – பருத்தித்துறை வீதி நேற்று திறந்து விடப்பட்டமை தேர்தல் விதிமுறை மீறல் என்று தெரிவிக்கப்படுகிறது

1271

28 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட பல பிரதேசங்கள் சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன.

எனினும் அண்மைக்காலமாக குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று குறித்த வீதி விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியலை முன்னிறுத்தி, இந்த வீதி திறப்பினை 30ஆண்டு ஆக்கிரமிப்பின் பின்னர் தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக படைத்தரப்பு மேற்கொண்டமை ஏன் என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வலிகாமம் விடுவிப்பு தொடர்பில் சீற்றமடைந்திருக்கும் மக்களிடையே நல்லெண்ணத்தை தோற்றுவிக்கவும், வலி.வடக்கில் தனது மகனை முன்னிலைப்படுத்தி தேர்தல் களத்தில் காத்திருக்கும் மாவை சேனாதிராசாவிற்கு அங்கீகாரம் வழங்கவுமே இந்த அவசர வீதி விடுவிப்பு நடைபெற்றிருந்ததாக சொல்லப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக வலி.வடக்கு தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் குதித்துள்ளவரும், மாவை சேனாதிராசாவின் சகபாடியுமான குணபாலசிங்கம் என்பவர் முன்னிலைப்படுத்தப்பட்டு படையினரால் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரான அரச அதிபர் பிரசன்னத்தில் வேட்பாளர் ஒருவர் இத்தகைய நிகழ்வில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என்ற குறற்சசாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பொதுநிகழ்வுகளில் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தக்கூடாதென தேர்தல் ஆணையாளரும் அதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் சுற்றுநீரூபங்கள் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *