முக்கிய செய்திகள்

போர்க்குற்றம் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும்

1039

போர் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது.

செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் 500 பக்கங்களைக்கொண்ட அறிக்கையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கை நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பொதுச் செயலாளரும் மக்கள் கருத்தறியும் குழுவின் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

போர் குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால், நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழு நியமிக்கப்பட்டதுடன், கலாநிதி மனோரி முத்தேட்டுகம தலைமையிலான குழுவினர் நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அனைத்துலக விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த நிலையில், செயலணியின் அமர்வுகளில் மக்கள் முன்வைத்த கருத்துக்களைத் தொகுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணையே தேவை என்ற பரிந்துரை செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் போர்க் குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மை மற்றும் நீதியைக் கண்டறிதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், அதற்கான இழப்பீடுகளை பெறுவதற்கு வழிவகைசெய்தல் போன்ற இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் வழிவகைககள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நல்லிணக்கப்பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணி இவ்வாண்டு சனவரி 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த நோக்கங்களை அடைவதற்காக, காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமைக்கான ஆணைக்குழு, விசேட நீதிமன்றத்தை உள்ளடக்கிய நீதிமன்ற பொறிமுறை ,இழப்பீட்டிற்கான அலுவலகம் ஆகியவற்றை அமைக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *