முக்கிய செய்திகள்

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக? – விக்னேஸ்வரன்

1383

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் எதற்காக அமைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைசர் விக்னேஸ்வரன், எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என வினவியதுடன், எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில், முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்துகெர்ணடு உரையாற்றிய போதே, வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இநத எழுக தமிழ் பேரணி ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல எனவும், நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட இதனை நடாத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாதாலோ, மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது எனவும், மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம் என்றும் அவர் விபரித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு தொடர்பாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளதனையும் சுடடிக்காட்டியுள்ள அவர், அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை எனவும், சில அடிப்படைக் கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக் கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாளிற்கு முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருள் பாவனை இம்மியளவும் இருக்கவில்லை என்பதனை, இலங்கை அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவம் பாதுகாப்பு என்ற போர்வையில் நிலைகொண்டுள்ள வடபகுதியில், எவ்வாறு மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன் எனவும், அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா என்றும் முதலமைச்சர் தனது உரையில் விசனம் வெளியிட்டுள்ளார்.

போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் கூட, கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாததொன்றாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால், கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தேன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவமயமாக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன எனவும், தற்போதும் தமிழ் மக்களின் பல காணிகளை இராணுவத்தினர் அபகரித்து கொண்டுதான் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவற்றுக்கான தீர்வுகள் ஏன் இன்னமும் காணப்படவில்ல எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *