முக்கிய செய்திகள்

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக சீனா 7.6 மில்லியன் டொலர்களைச் செலவிட்டதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது

405

இலங்கை அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார் எனவும், 2015ஆம் ஆண்டின் அதிபர் தேர்தல் நெருங்கி வந்த போது, மகிந்த ராஜபக்ச வட்டத்தை நோக்கி பெருமளவு நிதி சீனாவினால் பாய்ச்சப்பட்டது எனவும், குறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், “ஸ்ரான்டட் சார்ட்டட்” வங்கி கணக்கின் ஊடாக மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாகவும் அதில் விபரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும், அத்துடன் 6,78,000 டொலர் பெறுமதியான தேர்தல் சட்டைகள் மற்றும் ஏனைய பரப்புரைப் பொருட்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2,97,000 டொலர்களுக்கு பெண்களுக்கான சேலைகள் உட்பட ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், மகிந்தவுக்கு ஆதரவு அளித்த முக்கியமான பௌத்த பிக்குவுக்கு, 38,000 டொலர் வழங்கப்பட்டதாகவும் அதில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக இருந்த அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டதாகவும், இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டதாகவும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *