மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி சிறீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார்.

434

இலங்கையில் புதிதான நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று சிறீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று சிறீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

சிறீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக்கொண்டவர்களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அந்த கட்சியின் ஆலோசர்களில் ஒருவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் இவ்வாறு சிறீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக் கொண்டமையானது, சிறீலங்கா சுநதந்திரக்கட்சிக்கும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன முன்னணி 50 லட்சத்து 6 ஆயிரத்து 837 வாக்குகளை பெற்ற நிலையில், சிறீலங்கா சுதந்திரக்கட்சி சுமார் 14 லட்சத்து 97 ஆயிரத்து 234 வாக்குகளை மாத்திரமே பெற்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி 36 லட்சத்து 40 ஆயிரத்து 620 வாக்குகளை பெற்ற நிலையில், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சியாக மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *