முக்கிய செய்திகள்

மக்களை அச்சத்தில் வைப்பதே தமிழக அரசின் நோக்கமா என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

367

மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பிலேயே இன்று இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், தமிழக காவல் துறையையும், தமிழக அரசையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் நாள் போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையைப் படித்தாலே அவை அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போதுதான் பதிவு செய்யப்பட்டன என்பது புலனாகிறது என்றும், ஒரு நபரின் பெயர் பல அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிதிமன்றம், இதன் மூலம் அவர்கள் ஒரு வழக்கில் பிணை பெற்றாலும் வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டனவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் ஒரு மிகச் சிறிய பங்கு வகித்திருந்தாலும், அவர்கள் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்படும் என்றும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அச்சத்தில் அவர்கள் இருப்பார்கள் என்று அரசுக்கு தெரியாமலோ, அக்கறை இல்லாமலோ போய் விட்டதா என்றும் அது கேள்வி எழுப்பியுள்ளது.

தங்கள் உற்றார் உறவினர்களை இழந்த மக்கள் தாங்களோ தங்கள் அன்புக்குரியவர்களோ கைது செய்யப்படுவோம் என்று தொடர்ந்து பயப்பட வேண்டுமா என்றும், இவற்றை அரசு தெரியாமல் செய்ததா, இல்லை அரசின் நோக்கமே இதுதானா என்ற கேள்விகளையும் இன்றைய வழக்கின் தீர்ப்பின் போது நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *